திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.7 திருநள்ளாறும் - திருஆலவாயும் (மதுரை) - வினாவுரை
பண் - நட்டபாடை
பாடக மெல்லடிப் பாவையோடும்
    படுபிணக் காடிடம் பற்றிநின்று
நாடக மாடுநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள்
    துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த
ஆடக மாடம் நெருங்குவடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1
திங்களம் போதுஞ் செழும்புனலுஞ்
    செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து
நங்கள் மகிழுநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
பொங்கிள மென்முறை யார்களோடும்
    புனமயி லாட நிலாமுளைக்கும்
அங்கள கச்சுதை மாடக்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
2
தண்ணறு மத்தமுங் கூவிளமும்
    வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்
நண்ணல் அரியநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும்
    புகுந்துட னேத்தப் புனையிழையார்
அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
3
பூவினில் வாசம் புனலிற்பொற்பு
    புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு
நாவினிற் பாடநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர்விச்சா
    தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி
(*)ஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

(*) ஆவினில் ஐந்து என்றால் பஞ்சகவ்வியம் என்று பொருள்.
4
செம்பொன்செய் மாலையும் வாசிகையுந்
    திருந்து புகையு மவியும்பாட்டும்
நம்பும்பெ ருமைநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
உம்பரும் நாக ருலகந்தானும்
    ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்
அம்புத நால்களால் நீடுங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
5
பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு
    பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
நாகமும் பூண்டநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப்
    புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
ஆகமு டையவர் சேருங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
6
கோவண ஆடையும் நீறுப்பூச்சுங்
    கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும்
நாவணப் பாட்டுநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
பூவண மேனி இளையமாதர்
    பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து
ஆவண வீதியில் ஆடுங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
7
இலங்கை யிராவணன் வெற்பெடுக்க
    எழில்விர லூன்றி யிசைவிரும்பி
நலம்கொளச் சேர்ந்த நள்ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப்
    புந்தியிலு நினைச் சிந்தைசெய்யும்
அலங்கல்நல் லார்கள் அமருங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
8
பணியுடை மாலும் மலரினோனும்
    பன்றியும் வென்றிப் பறவையாயும்
நணுகல் அரியநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
மணியொலி சங்கொலி யோடுமற்றை
    மாமுர சின்னொலி என்றும்ஓவா
தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
9
தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ்
    சாதியின் நீங்கிய வத்தவத்தர்
நடுக்குற நின்றநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்னாள்விழவும்
    இரும்பலி யின்பினோ டெத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
10
அன்புடை யானை அரனைக்கூடல்
    ஆலவாய் மேவிய தென்கொலென்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை
    நயம்பெறப் போற்றி நலங்குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்
    பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்
    இமையவ ரேத்த இருப்பர்தாமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.49 திருநள்ளாறு
பண் - பழந்தக்கராகம்
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
1
தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.
2
ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.
3
புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.
4
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.
5
திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.
6
செஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர
அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
7
சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.
8
உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே.
9
மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
10
தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே.
11
இப்பதிகம் சமணர்கள் வாதின்பொருட்டுத் தீயிலிட்டபோது எரியாமல் இருந்ததால் பச்சைத்திருப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது.
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com